தமிழ்
விக்டோரிய மாகாணத் தேர்தல் சனிக்கிழமை 28 நவம்பர் அன்று நடைபெற உள்ளது.
மாகாணத் தேர்தலில் யார் வாக்களிக்க வேண்டும்?
18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதான விக்டோரியாவில் வசிக்கும் அனைத்து ஆஸ்திரேலியக் குடிமக்களும் விக்டோரிய மாகாணத் தேர்தலில் வாக்களிக்கப் பெயரைப் பதிவு செய்துகொள்ள வேண்டும்.
நீங்கள் ஆஸ்திரேலிய பிரஜையாக ஆகி, ஆனால் இன்னும் வாக்காளர் பட்டியலில் பெயர்ப் பதிவு செய்துகொள்ளவில்லை என்றால், செவ்வாய்க்கிழமை 3 நவம்பர், இரவு 8 மணிக்குள் நீங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ள வேண்டும்.
மக்களில் பலரும் குடியுரிமைச் சடங்கின்போது வாக்களிக்கப் பதிவு செய்துகொள்கின்றனர். உங்கள் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதா என உங்களுக்கு உறுதியாகத் தெரியாவிட்டால்? அதைச் சோதிப்பதற்கு நீங்கள் 03 9209 0122 என்ற எண்ணில் எங்களை அழைக்கலாம்.
வாக்களிக்கப் பதிவு செய்தல்
நீங்கள் வாக்களிக்க ஆன்லைனில் (ஆங்கிலத்தில்) பதிவு செய்யலாம் அல்லது உதவிக்கு ஆஸ்திரேலிய தேர்தல் ஆணையத்தின் (Australian Electoral Commission, AEC) மொழிபெயர்ப்பு வளங்களை நீங்கள் காணலாம்.
சேர்க்கைக்கான காலக்கெடுவை (செவ்வாய்க்கிழமை, 3 நவம்பர் இரவு 8 மணி), நீங்கள் தவறவிட்டால், வாக்களிப்பு மையத்தில் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்காது. தேர்தல் அதிகாரியிடம் நீங்கள் உங்கள் பெயரைச் சேர்த்து வாக்களிப்பு மையத்தில் வாக்களிக்க விரும்புவதைச் சொல்லலாம். படிவத்தை நிரப்ப அவர்களால் உதவ முடியும்.
உங்கள் விபரங்களைச் சரிபாருங்கள் அல்லது புதுப்பியுங்கள்
வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் சேர்க்கப்பட்டதும், உங்கள் விபரங்களை அற்றைப்படுத்தி வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு முறை நீங்கள் வீடு மாறும்போதும் உங்கள் சேர்க்கை விபரங்களை நீங்கள் புதுப்பிக்க வேண்டும். உங்கள் பெயரை மாற்றியிருந்தாலோ அல்லது சமீபத்தில் இடம் மாறியிருந்தாலோ, செவ்வாய்க்கிழமை, 3 நவம்பர் அன்று இரவு 8 மணிக்கு முன்னதாக உங்கள் விபரங்களை நீங்கள் புதுப்பிக்க வேண்டும்.
உங்கள் முகவரியை அல்லது உங்கள் பெயரை மாற்ற பெயர்ப்பதிவுக்கான திருத்தத்தை ஆன்லைனில் (ஆங்கிலத்தில்) நீங்கள் செய்யலாம்.
நான் வாக்களிக்க வேண்டுமா?
ஆம். நீங்கள் விக்டொரியாவில் பெயரைச் சேர்த்திருந்தால், நீங்கள் வாக்களிக்க வேண்டும். சரியான காரணமின்றி நீங்கள் வாக்களிக்காமல் இருந்தால், உங்களுக்கு $105 அபராதம் விதிக்கப்படலாம்.
எப்படி வாக்களிப்பது
முன்னதாக வாக்களியுங்கள்
இந்தத் தேர்தலில் யார் வேண்டுமானாலும் முன்னதாக வாக்களிக்கலாம்; அதற்கு எந்த சிறப்புக் காரனமோ அல்லது கூடுதல் படிவத்தை நிரப்ப வேண்டியதோ இல்லை.
முன்கூட்டிய வாக்குப்பதிவு மையங்கள் புதன்கிழமை, 18 நவம்பர் முதல் வெள்ளிக்கிழமை, 27 நவம்பர்வரை காலை 9 முதல் மாலை 6 மணிவரை திறந்திருக்கும். ஞாயிற்றுக்கிழமை, 22 நவம்பர் அன்று முன்கூட்டிய வாக்குப்பதிவு மையங்கள் மூடியிருக்கும்.
தேர்தல் நாளன்று வாக்களித்தல்
தேர்தல் நாள் வாக்குப்பதிவு மையங்கள் சனிக்கிழமை, 28 நவம்பர் அன்று காலை 8 மணி முதல் மாலை 6 வரை திறந்திருக்கும்.
புதன்கிழமை, 4 நவம்பர் முதல் இந்த இணையதளத்தில் உங்களுக்கு அருகாமையிலுள்ள வாக்களிப்பு மையங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்.
அனைத்து வாக்களிப்பு மையங்களிலும் 29 மொழிகளில் வாக்களிப்பு வழிகாட்டுதல்கள் இருக்கும்.
வாக்களிப்பு மையங்களில் உள்ள சில ஊழியர்கள் ஆங்கிலத்தையும் பிற மொழிகளையும் பேசக்கூடும். தாங்கள் பேசும் மொழியுடன் கூடிய ஒரு பேட்ஜை அவர்கள் அணிந்திருப்பர்.
அஞ்சல் வழி வாக்களிப்பு
இந்தத் தேர்தலில் வாக்குச் சீட்டுகளை உங்களுக்குத் தபால் மூலம் அனுப்புவதற்கு நீங்கள் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.
புதன்கிழமை, 4 நவம்பருக்கும் புதன்கிழமை, 25 நவம்பர் மாலை ஆறுமணிக்கு இடையிலும் நீங்கள் விண்ணப்பிக்கலாம்.
வாக்குச் சீட்டுத் தொகுப்புகளை நவம்பர் 10 செவ்வாய்க்கிழமை முதல் நாங்கள் தபால் மூலம் அனுப்புவோம். உங்கள் வாக்குப்பதிவை நிறைவு செய்து கட்டணமில்லா உறையில் வைத்து அதை சனிக்கிழமை, 28 நவம்பர் மாலை 6 மணிக்கு முன்பாக அனுப்புங்கள்.
வாக்குச் சீட்டை நிரப்புவது எப்படி
உங்கள் வாக்கு கணக்கில் எடுக்கப்படுவதற்கு, உங்கள் இரு வாக்குச் சீட்டுகளையும் நீங்கள் சரியாகப் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

சிறிய அளவிலான கீழவை வாக்குச் சீட்டில்:
- யார் வெல்ல வேண்டுமென விரும்புகிறீர்களோ அவருக்கு அடுத்துள்ள பெட்டியில் 1 என எழுதவும்
- உங்கள் இரண்டாவது தேர்வை அடுத்துள்ள பெட்டியில் 2 என எழுதவும்
- உங்கள் மூன்றாவது தேர்வை அடுத்துள்ள பெட்டியில் 3 என எழுதவும்
- அனைத்துப் பெட்டிகளிலும் எண் இருக்கும்வரை தொடர்ந்து இலக்கமிடவும்
- எண்களை மட்டும் பயன்படுத்தவும்.

பெரிய மேலவை வாக்குச்சீட்டில் நீங்கள் கீழ்க்கண்டவற்றுள் ஒன்றைச் செய்யலாம்:
- கோட்டுக்கு மேலே நீங்கள் தேர்வு செய்யும் வரிசைப்படி குறைந்தது ஐந்து பெட்டிகளில் இலக்கமிடுவதன் மூலம் குழுக்களுக்கு வாக்களிக்கலாம்
அல்லது - கோட்டுக்குக் கீழே 1 முதல் 5 வரை நீங்கள் தேர்ந்தெடுக்கும் வரிசைப்படி குறைந்தது 5 பெட்டிகளில் இலக்கமிட்டு தனி வேட்பாளர்களுக்கு வாக்களிக்கலாம்.
- நீங்கள் விரும்பினால் 5க்கு மேல் இலக்கமிடலாம், ஆனால் உங்கள் வாக்கில் கணக்கில் கொள்ளப்பட குறைந்தது 5 வரை நீங்கள் இலக்கமிட வேண்டும்.
எவ்வாறு வாக்களிப்பது என்பது குறித்து கூடுதல் தகவல்கள்
விக்டோரியாவுக்கு வெளியில் உள்ளீர்களா?
புதன்கிழமை, 18 நவம்பருக்கும் சனிக்கிழமை, 28 நவம்பருக்கும் இடையே நீங்கள் விக்டோரியாவுக்கு வெளியில் இருந்தாலும்கூட நீங்கள் வாக்களிக்க முடியும். உங்களால் இயலும்:
- ஆஸ்திரேலியாவில் உள்ள எந்தவொரு மாநிலத்திலும் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்திற்குச் சென்று நீங்கள் நேரில் வாக்களிக்கலாம்
- எந்தவொரு அயல்நாட்டு வாக்குப்பதிவு மையத்திலும் நேரில் சென்று வாக்களிக்கலாம்
- அஞ்சல் வழி வாக்களிப்புக்கு விண்ணப்பித்து பூர்த்திசெய்த வாக்குச் சீட்டை எங்களுக்கு அனுப்புங்கள்
- அஞ்சல் வழி வாக்களிப்புக்கு விண்ணப்பித்து அதை உங்கள் அருகாமையிலுள்ள வெளிநாட்டுத் தூதரகச் சேகரிப்பு மையத்தில் திருப்பித் தரலாம்.
வேறு மாகாண வாக்குப்பதிவு மையங்கள் மற்றும் அயல்நாட்டு தூதரகச் சேகரிப்பு மையங்கள் வேலை நேரங்களில் மட்டுமே திறந்திருக்கும். தேர்தல் நாளில் (சனிக்கிழமை, 28 நவம்பர்) வேறு மாகாண வாக்களிப்பு மையங்களிலோ அல்லது அயல்நாட்டுத் தூதரகச் சேகரிப்பு மையங்களிலோ வாக்களிப்பு இருக்காது.
நீங்கள் வெளியூர் செல்வதை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
புதன்கிழமை, 18 நவம்பருக்கும் சனிக்கிழமை, 28 நவம்பருக்கும் இடையே நீங்கள் விக்டோரியாவிலிருந்து வெளியூர் செல்வதாக இருந்தால், உங்களால் முன்னதாக வாக்களிக்கவோ அல்லது அஞ்சல் வழியில் வாக்களிக்கவோ முடியாது. நீங்கள் கிளம்பும்முன் எங்களுக்குத் தெரியப்படுத்தலாம்.
எங்களுக்குத் தெரிவிக்க 3 வழிகள் உள்ளன:
- ஒரு மொழிபெயர்த்துரைப்பாளருடன் பேச அழையுங்கள் >03 9209 0122
- விக்டோரியாவிலிருந்து வெளியூர் செல்லுதல் படிவத்தை (ஆங்கிலத்தில்) நிரப்ப என் பெயர்ப் பதிவைச் சரிபார்க்கவும் என்பதைப் பயன்படுத்தவும்
- தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ நீங்கள் வேறு மாகாணத்தில் அல்லது அயல்நாட்டில் இருப்பீர்கள் எனில், நீங்கள் அயல்நாட்டு அறிவிப்புப் படிவத்தை (ஆங்கிலத்தில்) AEC வாயிலாக நிரப்பலாம்.
VoterAlert
VoterAlert என்பது தேர்தல் நினைவூட்டலுக்கான இலவச குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் சேவையாகும். நீங்கள் தேர்தல் தகவல்களையும் வாக்களிப்பு நினைவூட்டல்களையும் (ஆங்கிலத்தில்) பெறலாம்.
VoterAlert-க்குப் பதிவுசெய்தல்
தேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள் யார், யார்
உங்கள் பகுதியில் தேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள் யார், யார் என்பதை (ஆங்கிலத்தில்) புதன்கிழமை, 4 நவம்பர் முதல் நீங்கள் காணலாம்.
தேர்தலில் நிற்பது
நீங்கள் தேர்தலில் நிற்க விரும்பினால், வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும்.
தேர்தலில் நிற்பதற்கான வேட்புமனுவை புதன்கிழமை, 4 நவம்பர் முதல் திங்கட்கிழமை, 9 நவம்பர் நண்பகல் 12 மணிவரை பெறலாம்:
தேர்தலில் நிற்பது குறித்த தகவல்களை (ஆங்கிலத்தில்) மேலும் அறிய
நன்கொடையை வெளிப்படுத்துதல்
எந்த ஆஸ்திரேலிய பிரஜையும், ஆஸ்திரேலியக் குடியிருப்பாளரும் மற்றும் தொடர்புடைய வணிக எண்ணைக் கொண்ட எந்த ஒரு நிறுவனமும் விக்டோரியாவில் அரசியல் நன்கொடைகளை நல்கலாம். தொடர்புடைய வணிக எண்கள்:
- ஆஸ்திரேலிய வணிக எண் (ABN)
- ஆஸ்திரேலிய நிறுவன எண் (ACN).
15 ஏப்ரல் 2026க்கும் 28 நவம்பர் 2026க்கும் இடையில் ஒரு நன்கொடையாளரால் ஒரு பெறுநருக்கு $5,190க்குமேல் நன்கொடையளிக்க முடியாது. $1,290 அல்லது அதற்குமேல் நீங்கள் அரசியல் நன்கொடை அளித்தால் அல்லது பெற்றால், எங்கள் ஆன்லைன் அமைப்பு VEC வெளிப்படுத்தல்கள் மூலம் அதை வெளிப்படுத்த வேண்டும். இதை நன்கொடை பெற்ற 21 நாட்களுக்குள் நீங்கள் செய்தாக வேண்டும். நீங்கள் $1,290 அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நன்கொடைகளாக வழங்கினால் ஒவ்வொரு நன்கொடையையும் நீங்கள் அறிவிக்க வேண்டும்.
அரசியல் நன்கொடையை வெளிப்படுத்துதல்
அரசியல் நன்கொடைகள் குறித்து (ஆங்கிலத்தில்) மேலும் வாசிக்க
நீங்கள் வாக்களிக்காவிட்டால் என்ன நிகழும்?
நீங்கள் வாக்களித்ததற்கான பதிவு எங்களுக்குக் கிடைக்காவிட்டால், நீங்கள் வாக்களித்தீர்களா எனக் கேட்டு கடிதம் அனுப்புவோம்.
- நீங்கள் வாக்களித்திருந்தால், எங்கு வாக்களித்தீர்கள் என்று எங்களிடம் கூறுங்கள், இதனால் எங்கள் பதிவேடுகளை நாங்கள் சோதிக்க இயலும்
- நீங்கள் வாக்களித்திருக்காவிட்டால் , உங்கள் காரணத்தை எங்களிடம் கூறுங்கள்.

இந்த அறிவிப்புக்கு நீங்கள் ஆன்லைனில், தபால் மூலம் அல்லது மின்னஞ்சல் வாயிலாகப் பதிலளிக்கலாம்.
நீங்கள் பதிலளிக்காவிட்டால் அல்லது வாக்களிக்காததற்கு உங்களிடம் சரியான காரணம் இல்லாவிட்டால், நீங்கள் $105 அபராதம் செலுத்த வேண்டிவரலாம்.
கூடுதல் தகவல்கள்
2026 மாகாணத் தேர்தல் குறித்து உங்களுக்குக் கேள்வி இருந்தால், மொழிபெயர்த்துரைப்பாளர் மூலம் எங்களுடன் பேச >03 9209 0122 என்ற எண்ணை அழையுங்கள்.